தேசம்

‘பிரிவினை கால பயங்கரங்கள்’: பொது இடங்களில் பார்வைக்கு வைக்கிறது மத்திய அரசு!

காமதேனு

இந்தியா சுதந்திரமடைந்த அதே காலகட்டத்தில் தேசப்பிரிவினையும் நிகழ்ந்தது. இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் தனிநாடாக உருவானது. ஆகஸ்ட் 15-ல் இந்தியாவில் சுதந்திரக் காற்று வீசுவதற்கு, முதல் நாளில் பாகிஸ்தான் பிறந்தது. அந்நாட்டின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14-ல் கொண்டாடப்படுகிறது.

தேசப்பிரிவினையின்போது பாகிஸ்தானில் வசித்துவந்த ஏராளமான இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் வசித்த முஸ்லிம்களில் பலர் பாகிஸ்தானுக்குக் குடிபுகுந்தனர். எனினும், பலர் இந்தியாவிலேயே தங்க முடிவெடுத்தனர். இந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த கலவரங்கள் கடந்தகால கறுப்புப் பக்கங்கள். பாகிஸ்தானுக்குக் குடிபுகுந்த எழுத்தாளர் சாதத் ஹஸன் மன்டோ முதல் இந்தியாவின் முக்கியமான எழுத்தாளராகப் புகழ்பெற்ற குஷ்வந்த் சிங் வரை ஏராளமானோர் அந்தத் துயர நாட்களைத் தங்கள் படைப்புகளில் பதிவுசெய்திருக்கின்றனர். பல திரைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தையொட்டி பிரிவினை காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பொது இடங்களில் வைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. அதன்படி, ஆகஸ்ட் 10 முதல் 14 வரை, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் இதுதொடர்பான கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கும் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம், ரயில் நிலையங்களில் பெருமளவு மக்களைச் சென்று சேரும் வகையில் கண்காட்சிகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தக் கண்காட்சி, வணிக வளாகங்கள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்க், பயிற்சி நிலையங்கள் போன்றவற்றிலும் நடத்தப்படும் எனத் தெரிவித்திருக்கும் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம், இந்தக் கண்காட்சிகளின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது.

ஆங்கிலத்திலும், இந்தியிலும் தயாரான இந்தக் ஆவணத் தொகுப்பை ‘ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ இணையதளத்திலும் பார்க்க முடியும்.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆற்றிய சுதந்திர தின விழா உரையில், 2022 ஆகஸ்ட் 14-ல் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் ‘தேசப்பிரிவினை பயங்கரங்கள் நினைவுதினம்’ அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT