ராஜூ ஸ்ரீவாஸ்தவ்
ராஜூ ஸ்ரீவாஸ்தவ் 
தேசம்

‘அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்’ - ராஜூ ஸ்ரீவாஸ்தவுக்குப் பஞ்சாப் முதல்வர் அஞ்சலி

காமதேனு

மறைந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் ராஜூ ஸ்ரீவாஸ்தவுக்கு பஞ்சாப் முதல்வரும் முன்னாள் ஸ்டாண்ட்-அப் காமெடியனுமான பகவந்த் மான் அஞ்சலி தெரிவித்திருக்கிறார்.

தொலைக்காட்சி ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ராஜூ ஸ்ரீவாஸ்தவ். 58 வயதான ராஜூ, பாலிவுட் நடிகர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரது குரலில் மிமிக்ரி செய்யும் திறன் பெற்றிருந்தார். அமிதாப் பச்சன் முதல் லாலு பிரசாத் யாதவ் வரை பலரது குரல்களில் அவர்கள் முன்னிலையிலேயே பேசி பாராட்டுகளை வாங்கிய பெருமையும் அவருக்கு உண்டு.

ஆகஸ்ட் 10-ம் தேதி டெல்லியில் உள்ள ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்த அவர், இன்று காலை மரணமடைந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வரும் ஒரு காலத்தில் ராஜூவுடன் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவருமான பகவந்த் மான் அவருக்கு அஞ்சலி தெரிவித்திருக்கிறார்.

பகவந்த் மான்

இது குறித்த ட்விட்டர் பதிவில், ‘நீங்கள் எங்களை வெகுவாகச் சிரிக்க வைத்தீர்கள். உங்கள் மறைவு குறித்த செய்தி எனக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கும் பகவந்த் மான், ‘நான் அவருடன் நீண்டகாலம் பணிபுரிந்திருக்கிறேன். நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் நம்மிடையே இல்லை. ஆனால், அவரது நகைச்சுவைத் திறன் என்றென்றும் நம் நெஞ்சங்களில் உயிர்ப்புடன் நிலைத்திருக்கும். உங்களை இழந்து வாடுகிறோம் கஜோதர் பாய்' என உருக்கமாகக் கூறியிருக்கிறார்.

‘கஜோதர் பாய்’ எனும் கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ராஜூ.

அதேபோல், பகவந்த் மானும் ஒரு காலத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகழ்பெற்றவர். 2005-ல் நடந்த 'தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச' நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT