தேசம்

Olx-ல் பியூட்டிஷியன் வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரம்: நம்பிச் சென்ற இளம்பெண்களுக்கு நடந்த துயரம்!

காமதேனு

Olx-ல் பியூட்டிஷியன் வேலைக்காக பதிவு செய்த பெண்களை குறிவைத்து அவர்களை வேலை தருவதாக அழைத்து சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சுமித்ரா, வடபழனியை சேர்ந்த இளம்பெண்ணுடன் சேர்ந்து நேற்று வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், ஒரு வாரத்திற்கு முன்பு Olx ஆப்பில் பியூட்டிஷியன் வேலைக்காக பதிவு செய்தோம். அதனை பார்த்து நந்தினி என்பவர் தொலைபேசி வாயிலாக தங்களை தொடர்பு கொண்டு இருவருக்கு மசாஜ் வேண்டுமென்றும் அதற்கு அதிக பணம் தருவதாகவும் கூறினார். மேலும் வடபழனி மசூதி தெருவில் உள்ள விடுதி ஒன்றிற்கு இரு வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்றும் அவர்களுக்கு மசாஜ் செய்த பின்பு மொத்த பணத்தையும் தருவதாகவும் அப்பெண் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி இருவரும் விடுத்திக்கு சென்று வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபோது இருவர் மசாஜ் செய்வதற்காக அறைக்கு வந்தனர். பின்னர் அந்த இருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி சுமித்ராவிடமிருந்து 2 சவரன் நகை, செல்போன், 1500 பணம் மற்றும் மற்றொரு பெண்ணிடமிருந்து 5.5 சவரன் நகை, 5 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வடபழனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக நெசப்பாக்கத்தை சேர்ந்த மோனிஷ் குமார்(19), செங்கல்பட்டை சேர்ந்த சந்தோஷ் குமார்(24) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், நகையை பறித்து சென்றதாக புகார் அளித்த சுமித்ராவே திட்டமிட்டு நாடகமாடி நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் புகார் அளித்த சுமித்ராவின் நிஜ பெயர் தீபிகா என்பதும் வியாசர்பாடியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் olx-ல் பியூட்டிஷியன், மேக்கப், வேலைக்காக பதிவு செய்யும் பெண்களை குறி வைத்து, தீபிகா நந்தினி என பெயரில் அவர்களிடம் செல்போனில் பேசி அறிமுகமாகி பின்னர் அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி மசாஜ் செய்ய இளம் பெண்களை விடுதிக்கு வரவழைத்து அங்கு ஏற்கெனவே வாடிக்கையாளர் போல் இருவரை தயார் செய்து வைத்து அவர்களுடன் சேர்ந்து தீபிகா வேலைக்கு வரும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பில் ஈடுபட்டு வருவதை கண்டுபிடித்தனர்.

மேலும் நகைப்பறிப்பில் ஈடுபட்டவுடன் மசாஜ் வேலைக்காக வந்த பெண்ணிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், பாலியல் தொழிலில் ஈடுபட்டது வீட்டிற்கு தெரியவந்து விடும். இதனால் புகார் அளிக்க வேண்டாம் என அவர்களது மனதை மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதேபோல் தீபிகா ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் உள்ள லாட்ஜ்களில் மசாஜ் செய்ய வரும் பல பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவர் அளித்த தகவலின் பேரில் கோயம்பேடு அருகே வைத்து தீபிகாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT