திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் 
தேசம்

வங்கதேசத்திலிருந்து மதுரையில் தங்கிய வாலிபரால் பரபரப்பு; கோயில் தலங்களை குறிவைத்து உலா வந்ததன் விநோத பின்னணி!

காமதேனு

மதுரையில் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி வங்கதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 20 நாட்களாக தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நபரை கைதுசெய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் நேற்று முன் தினம் வைகாசி விசாக திருவிழா நடந்தது. இந்த விழாவின் போது அப்பகுதியில் சந்தேகப்படும் நிலையில் சுற்றித் திரிந்த வாலிபர் ஒருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் வங்கதேசத்தில் உள்ள போக்ரா மாவட்டத்தினை சேர்ந்த கரிமுல்லா என தெரியவந்தது.

மேலும் அவரிடம் இந்தியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் இந்திய வரைபடம் மட்டும் வைத்திருந்ததால், அவர் தீவிரவாதியாக இருக்க கூடும் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வாலிபர் வங்கதேசத்திலிருந்து வேலை தேடி மேற்கு வங்க மாநிலத்தின் வழியாக சாலை மார்க்கமாக வந்ததும், அவர் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்காததால் கோயில்தலங்களுக்கு சென்றால் இலவச உணவும், தங்குமிடமும் கிடைக்கும் என்பதால் இந்திய வரைபடத்தை வைத்து, அதில் கோயில் நகரங்களை பார்த்து சென்று வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

முதலில் ஐதராபாத் சென்ற வாலிபர் பின்னர் அங்கிருந்து மதுரை வந்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள கோயில் மண்டபங்களில் தங்கியிருந்து நாட்களை கடத்தியுள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT