தேசம்

பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் ஜாமீன்: நீதிபதி உத்தரவை உடனடியாக நிறைவேற்றிய வாலிபர்!

காமதேனு

ஏமாற்றிய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் ஜாமீன் தருவதாக நீதிபதி கூறியதை அடுத்து அந்த பெண்ணை உடனடியாக வாலிபர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் அஜித் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை சத்யாவை கர்ப்பமாக்கினார். இந்த நிலையில் சத்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சத்யாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என அஜித் மறுத்துள்ளார்.

இதையடுத்து தன்னை ஏமாற்றிய அஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சத்யா வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித், தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்யாவைத் திருமணம் செய்து கொண்டால் தான் ஜாமீன் வழங்கப்படும் என நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார். மேலும் இந்த திருமணத்தை கண்காணிப்பதற்காக 2 வழக்கறிஞர்களையும் நியமித்தார். இதனை ஏற்றுக் கொண்ட அஜித் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சத்யாவை திருமணம் செய்து கொண்டார். வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெற்ற இத்திருமணத்தில் மணமக்களுக்கு நீதிபதி அப்துல் காதர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT