தேசம்

அமைச்சர் கார் மீது காலணி வீசிய பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு

கி.மகாராஜன்

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த வழக்கில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகியோரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் சந்தானகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவில், சரண்யாவுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. தனலெட்சுமி, தெய்வானை ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இருவரும் மறு உத்தரவு வரும் வரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். மனுதாரர்கள் மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் போலீஸ் காவல் கேட்டு தாக்கலான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார். இதே வழக்கில் கைதான குமார் உட்பட 6 பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT