தேசம்

நிராகரிப்பின் வலியைப் பேசும் 'ஐயோ சாமி': வைரலாகும் இலங்கை ஆல்பம்

காமதேனு

கணவன், காதலனால் கைவிடப்பட்ட பெண்களின் வலியை, நிராகரிப்பின் துயரைப் பேசும் ‘ஐயோ சாமி’ என்னும் இலங்கையில் இருந்து வெளியாகி இருக்கும் ஆல்பம் பாடல் வைரலாகி வருகிறது.

பெண்களின் துயர்மிகு வலி கைவிடப்பட்ட தருணங்களில் மிக அதிகம். அந்தவகையில் கணவர், காதலனால் கைவிடப்பட்ட பெண்களின் வலியைப் பேசும் பாடலாக வந்துள்ளது 'ஐயோ சாமி' ஆல்பம்.

‘’ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய், பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்” எனத் தொடங்கும் இந்த ஆல்பம் பாடல் யூடியூப் தளத்தில் நேற்று வெளியான நிலையில் இன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது.

இந்தப் பாடலை விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ என்னும் பாடலை எழுதிய இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார். இவர் இதற்கு முன்பு 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' படங்களுக்கு இவராகவே ரசிக மனநிலையில் எழுதிய புரமோ பாடல்கள் வைரலாயின. ஜெயலலிதா இரங்கல் பாடலை அஸ்மின் எழுதி, அது ஜெயலலிதா நினைவிடத்திலேயே ஒலித்தது குறிப்பிடத்தக்கது.

'ஐயோ சாமி' ஆல்பம் பாடலை இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக பாடியுள்ளார். பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக்க இந்தப் பாடலைப் பாடியுள்ளார். இலங்கையைச் சேர்ந்த குழுவினரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆல்பம் பாடல் தமிழகத்திலும் அதிகம்பேரால் கவனத்திற்குள்ளாகி வருகிறது. குறிப்பாக பெண்ணிய செயற்பாட்டாளர்கள் இதை வெகுவாக வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT