தேசம்

மதுரை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகவும்: சவுக்கு சங்கர் உயர் நீதிமன்ற பதிவாளர் நிபந்தனை

கி.மகாராஜன்

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தினமும் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவாளர் நிபந்தனை விதித்துள்ளார்.

நீதித்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சென்னையை சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கியது. இதையடுத்து சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சங்கருக்கு உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, சங்கருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது உச்சநீதிமன்றம், சங்கருக்கான ஜாமீன் நிபந்தனைகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் விதிக்க உத்தரவிட்டது.

அதன்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் வெங்கடாவரதன் ஜாமீன் நிபந்தனைகளை பிறப்பித்துள்ளார். அதில், சவுக்கு சங்கர் தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்களில் எந்த கருத்துக்களையும் பதிவிடகூடாது.

நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சங்கர் ஆஜராக வேண்டும். நீதித்துறை குறித்து எந்த கருத்துக்களையும் சங்கர் தெரிவிக்கக் கூடாது. 20,000 ரூபாய் மதிப்புள்ள இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT