தேசம்

கேரளாவிற்கு கடத்த முயற்சி: 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காமதேனு

விருதுநகரில் இருந்து கேரளாவிற்கு 22 டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளம் மாநிலத்திற்கு தினமும் பால்,காய்கறி, இறைச்சி கோழிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று நள்ளிரவு புளியரை காவல்துறை வாகனச்சோதனைச்சாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர் கலா தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸார் மற்றும் சோதனைச்சாவடி போலீஸாரும் வாகனத்தணிக்கை செய்தனர்.

அப்போது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லோடு என்ற பகுதிக்கு சரக்கு ஏற்றி வந்த லாரியைச் சோதனை செய்தனர். அந்த லாரி முழுவதும் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து லாரியையும், அதில் கடத்தி வரப்பட்ட 382 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியை ஓட்டி வந்த அதன் உரிமையாளரான திருவனந்தபுரம் மாவட்டம் கல்லோடு என்ற பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து திருநெல்வேலி சிவில் சப்ளை சிஐடி பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT