தேசம்

திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது - 25 பேர் மரணம்: உத்தராகண்டில் சோகம்

காமதேனு

உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்காகச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் உள்ள லால் தாங் பகுதியில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக சென்ற பேருந்து, செவ்வாய்க்கிழமை இரவு பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள ரிக்னிகல்-பிரோகல் சாலையில் 500 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்தப் பேருந்தில் குழந்தைகள் உட்பட 40 க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. "இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த விபத்தில் 25 பேர் இறந்துள்ளனர். இதில் 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்" என்று உத்தரகாண்ட் காவல்துறை தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

துமகோட்டின் பிரோகல் பகுதியில் நேற்று இரவு பேருந்து விபத்து நடந்த இடத்தில் நான்கு மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது. குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து உயிரிழந்தோர் மற்றும் காணமல் போனோரின் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பேசிய மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “விபத்து நடந்த இடத்தில் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் குவிக்கப்பட்டன. விபத்து நடந்த இடத்துக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறோம். உள்ளூர் கிராம மக்கள் மீட்பு நடவடிக்கையில் உதவி வருகின்றனர்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT