தேசம்

ஒருபக்கம் மாடுகள் தொல்லை; மறுபக்கம் மழை, வெயில்: போதிய வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி

காமதேனு

சீர்காழி அருகே அரசு பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் பாடம் படிக்கும் அவலநிலை உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி  130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் இருந்தன. இந்த நிலையில் 5 வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்ததால் அதிகாரிகளின் உத்தரவுப்படி அவை  இடித்து அப்புறப்படுத்தப்படடது. மேலும் இருக்கும்  ஒரு கட்டிடமும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.

இந்த பள்ளியில் புங்கனூர், காடாக்குடி, கீழவரவுகுடி, மல்லுக்குடி, ரெட்டிகோடங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஏராளமாேனார் படித்து வருகின்றனர்.  வகுப்பறைகள் இல்லாததால் தினமும் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்துதான்  படித்து வருகின்றனர். இதன் காரணமாக ஆசிரியர்கள், மாணவர்கள் தினமும் வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படுகின்றனர்.

தரையில் அமர்ந்து படிப்பதால் வெயில், மழை காலங்களில் மாணவர்களுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் போது பள்ளி வளாகத்திற்குள் ஆடுகளும், மாடுகளும்  உள்ளே புகுந்து அங்கும் இங்கும் திரிகின்றன.  அவைகளின் கழிவுகளால் பள்ளி வளாகத்தில் பெரும் அசுத்தம் ஏற்படுகிறது. பல நேரங்களில் வகுப்புகள் நடைபெறும் இடங்களில் அவை படுத்துக் கொள்வதால் பாடம் நடத்த இடமில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதையெல்லாம் மீறி வெயில் அடித்தால்  சமாளித்துக் கொண்டு பாடம் நடத்தும் ஆசிரியர்கள்,  தொடர்ந்து மழை பெய்தால் மாணவர்கள்  நலன் கருதி வகுப்புக்களை தொடர்ந்து நடத்த இயலாமல் போகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே பள்ளிக் கல்வித்துறை உடனடியாக இதில் கவனம் செலுத்தி போதிய அடிப்படை வசதிகளுடன் கூடிய வகுப்பறை கட்டிடங்களை  கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எததற்கோ கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி திட்டங்களை தீட்டும் தமிழக அரசு,  மாணவர்களின் அடிப்படை உரிமையான வகுப்பறை கட்டிடங்களை கட்டித் தர இனி மேலும் தாமதிக்கக்கூடாது.

SCROLL FOR NEXT