புழல் சிறை
புழல் சிறை வக்கீல் என்ற பெயரில் கைதியைச் சந்திக்க வந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்: புழல் சிறையில் பரபரப்பு
தேசம்

வக்கீல் என்ற பெயரில் கைதியைச் சந்திக்க வந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்: புழல் சிறையில் பரபரப்பு

காமதேனு

சென்னை புழல் சிறையில் வழக்கறிஞர் என்ற பெயரில் கைதியைச் சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்அழகன் என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று மதியம் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி தமிழ்அழகனை பார்ப்பதற்காக அவரது வழக்கறிஞர் ஒருவர் வந்துள்ளார். அப்போது சிறைக்காவலர்கள் கைதியைச் சந்திக்க வந்த வழக்கறிஞரின் அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை வாங்கி சரிபார்த்தனர்.

அப்போது அவரது அடையாள அட்டை போலி என்பது தெரியவந்தது. மேலும் வழக்கறிஞரின் என்ட்ரோல் எண்ணில் வேறொரு நபரின் பெயர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்கள் உடனே அந்த வாலிபரைப் பிடித்து புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலி வக்கீலின் அடையாள அட்டை.

இதனையடுத்து பிடிபட்ட போலி வழக்கறிஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல்லாவரம் ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த சதீஷ்(34) என்பதும் இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக தொழில் செய்து வருபவர் என்றும், எஸ்.எஸ். அசோசியேட் என்ற பெயரில் வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி வருவதும் தெரியவந்தது. மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற வழக்கறிஞரிடம் சதீஷ் பணியாற்றி வருவதாகவும், அவர் கூறியதன் பேரில் தமிழ்அழகனை சிறையில் சந்திக்க வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் சிறை கண்காணிப்பாளர் ரவிராஜ் அளித்த புகாரின் பேரில் போலி வழக்கறிஞர் சதீஷ் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் சதீஷ் அளித்த தகவலின் பேரில் மதுரவாயலைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக் யார், சதீஷீக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த நபர் குறித்தும், இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT