தேசம்

'ஓவர் ஸ்பீடில் வருவியா, சீட் பெல்ட் போட்டு ஓட்டமாட்டாயா?': காரை நிறுத்தி தகராறு செய்வது போல் ரூ.10 லட்சம் கொள்ளை

காமதேனு

சாலையில் சென்று கொண்டிருந்தக் காரை வழிமறித்து தகராறு செய்த கும்பல் ஒன்று, தகராறின் இடையே பத்து லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் குலசேகரபட்டிணத்தில் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(40). இவர் மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள இரும்புக்கடையில் வேலைசெய்து வருகிறார். இவர் உடன்குடி தேரியூரில் உள்ள இரும்புக்கடை ஒன்றில் வசூல் பணம் பத்து லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு காரில் திரும்பி வந்துகொண்டு இருந்தார்.

தூத்துக்குடியை நோக்கி செந்தில்குமார் காரில் வந்துகொண்டிருந்தபோது, உடன்குடி - குலசேகரப்பட்டிணம் சாலையில் பின்னால் பைக்கில் வந்த இருவர் செந்தில்குமாரின் காரை ஓவர்டேக் செய்து வழிமறித்தனர்.

'ஓவர் ஸ்பீடில் வருவியா? சீட் பெல்ட் போட்டு காரை ஓட்டமாட்டாயா?' என செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர். செந்தில்குமாரும் அவர்களிடம் பதிலுக்கு வாக்குவாதம் செய்தார். சிறிதுநேரத்தில் டூவீலரில் வந்தவர்கள் சண்டைபோட்டுவிட்டு சென்றுவிட்டனர். செந்தில்குமார் காரில் ஏறிப் பார்த்தபோதுதான், காரில் வைத்திருந்த பத்துலட்ச ரூபாய் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

நடுவழியில் காரை நிறுத்தி சண்டை போடுவதுபோல் நடித்து, இருவரும் பத்து லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது அதன் பின்னரே செந்தில்குமாருக்கு புரியவந்தது. இந்த நூதனக்கொள்ளைத் தொடர்பாக குலசேகரபட்டிணம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT