தேசம்

ஆ.ராசாவின் 55 கோடி ரூபாய் பினாமி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

காமதேனு

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்திற்குச் சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

திமுக துணைப் பொதுச்செயலாளாரான ஆ. ராசா கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த காலக்கட்டத்தில் கூர்கானில் உள்ள மிகப்பெரிய தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சுற்றுச்சூழலுக்கான அனுமதி அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கூர்கானில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றதற்கு, பிரதிபலனாக கடந்த 2007-ம் ஆண்டு ஆ.ராசாவின் பினாமி கம்பெனிக்கு மிகப்பெரிய அளவில் கமிஷன் தொகை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்பு அந்த பினாமி கம்பெனியை ஆ.ராசா தன்னுடைய குடும்பத்தார் பெயரில் இணைத்துக் கொண்டதும் , அந்த பினாமி கம்பெனி எந்த ஒரு வியாபாரத்திலும் ஈடுபடவில்லை என்றும், இந்த கமிஷன் தொகையைப் பெறுவதற்காகவே மட்டுமே அது பயன் படுத்தப்பட்டது என்றும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்த கமிஷன் தொகையை வைத்து கோயம்புத்தூரில் பினாமி கம்பெனி பெயரில் 55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூரில் பினாமி பெயரில் வாங்கப்பட்ட 55 கோடி ரூபாய் மதிப்பிலான 45 ஏக்கர் நிலச்சொத்துக்களை அமலாக்கதுறையினர் தற்போது முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT