தேசம்

‘ஆவினுக்கு மூடுவிழா திட்டமிடுகிறதா திமுக அரசு..?’

காமதேனு

’ஆவின் நிறுவனத்தில் பால் பொருட்களின் விலையை அடுத்தடுத்து உயர்த்துவதன் மூலம், தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக ஆவினுக்கு மூடுவிழா நடத்த திட்டமிட்டிருக்கிறதா திமுக?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை.

ஆவின் நிறுவனத்தின் ஆரஞ்சு நிற வகையிலான பாலின் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஆவின் நெய் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.580-ஆக இருந்த ஆவின் நெய் விலையில் ரூ.50 உயர்த்தி, ரூ.630 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆவின் பால் பொருட்களின் விலை படிப்படியாக உயர்த்தப்படுவது தொடர்பாக அண்ணாமலை ஐயம் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள தகவலில், ‘ஆவின் பால் விலையை உயர்த்தி, வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு, இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியதன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது. தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு?’ என்று காட்டம் காட்டியுள்ளார்.

Annamalai

ஆவின் பொருட்கள் விலை உயர்வை முன்னிட்டு தமிழக அரசுக்கு எதிராக கொதித்துள்ள அண்ணாமலை, இன்னொரு விவகாரத்தில் அரசுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில், ‘அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக நடத்திய மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று திமுக அரசு அறிவித்துள்ளது. விவசாய பெருங்குடி மக்களின் குரலுக்கும் தமிழக பாஜகவினரின் குரலுக்கும் செவி சாய்த்த தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் தமிழக அரசுக்கு எதிரான ஆட்சேபத்தையும், ஆதரவான நன்றியையும் அடுத்தடுத்து அண்ணாமலை வெளியிட்டு இன்று ஆச்சரியம் தந்துள்ளார்.

SCROLL FOR NEXT