தேசம்

10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்கிறது அமேசான்: ட்விட்டர், மெட்டாவை தொடர்ந்து அதிரடி

காமதேனு

ட்விட்டர், மெட்டாவை தொடர்ந்து அமேசான் நிறுவனம் அடுத்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. அதன்படி தனது ஊழியர்கள் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் உலகின் நம்பர் ஒன் கோட்டீஸ்வரரான எலான் மஸ்க். இதையடுத்து, ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தார். இவரது இந்த நடவடிக்கை கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.

இதனிடையே, மெட்டா நிறுவனமும் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை என்று மெட்டா நிறுவனத்தின் தலைவர் கூறி இருந்தார். அந்த வரிசையில் தற்போது அமேசான் நிறுவனமும் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் முன்னணி அமேசான் நிறுவனம் உலக அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒரு நாளைக்கு பல ஆயிரம் கோடிகளை இந்த நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது.

தற்போது இந்த நிறுவனம் தனது ஊழியர்கள் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில்லறை விற்பனை, மனித வளம், குரல்வழி உதவி அலெக்சா ஆகிய பிரிவுகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. உலக முழுவதும் அமேசான் நிறுவனத்தில் 15 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்குவது ஒரு சதவீதத்துக்கும் குறைவு என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT