தேசம்

மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுப்பு: கேரள அரசு அதிரடி நடவடிக்கை

காமதேனு

கேரள மாநிலம், கொச்சின் பல்கலைக்கழகம் மாணவிகள் மாதவிடாய் காலங்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பல்கலைக்கழக நிர்வாகக் குழுவின் ஒப்புதலும் கிடைத்துவிட்ட நிலையில் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

கேரளம் சமூகநீதி சார்ந்து பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் கேரளத்தில் பினராயி விஜயனின் முந்தைய ஆட்சியிலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதேபோல் அங்கு ஜவுளிக்கடை உள்ளிட்ட கடைகளில் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்ய வேண்டும் எனவும் சட்டம் உள்ளது. அந்தவகையில் அடுத்தப் பாய்ச்சலாக இப்போது மாதவிடாய் காலங்களில் மாணவிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சின் பல்கலைக்கழகத்தின் மாணவ மன்றம் சார்பில் மாதவிடாய் காலங்களில் மாணவிகள் வலியை அனுபவிப்பதால், அதற்கு அனுமதிக்கப்பட்ட விடுப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இதற்கு இப்போது கொச்சின் பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வுகளை எழுத 75 சதவீத வருகைப்பதிவு இருக்க வேண்டும். மாணவிகளுக்கு மட்டும் மாதவிடாய் கால விடுப்பு போக இது 73 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாத்ருபூமி நாளிதழ் தன் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு அனுமதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT