ஏலியன் - சித்தரிப்பு
ஏலியன் - சித்தரிப்பு 
தேசம்

அமெரிக்க - சீன மோதலால் ஏலியன்களுக்கு சீண்டல்?!

எஸ்.சுமன்

சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக, தங்களது வான் எல்லையில் ஊடுருவிய அடையாளம் அறியப்படாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்த சீனா முடிவு செய்துள்ளது. இந்த பின்னணியில் ஏலியன்களை நம்புவோர் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சீனா ஏவிய கண்காணிப்பு உபகரணங்கள் கூடிய பலூன் ஒன்று, தங்கள் வான் எல்லையில் அத்துமீறி ஊடுருவியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, அதனை அண்மையில் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாக உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு சீனா கடும் ஆட்சேபம் பதிவு செய்தது.

அமெரிக்க வான் பரப்பில் ஊடுருவிய சீன உளவு பலூன்

காலநிலை ஆய்வுக்காக ஏவப்பட்ட பலூன் திசை மாறி அமெரிக்க எல்லைக்குள் பிரவேசித்ததாகவும், அதனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருப்பது அத்துமீறல் என்றும் சீனா சீறியது. இந்த சீன பலூன் மட்டுமன்றி, அலஸ்கா மற்றும் அமெரிக்க - கனடா எல்லையில் தென்பட்ட மேலும் 2 அடையாளம் அறியப்படாத பறக்கும் பொருட்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டன. வட அமெரிக்க வான்பாதுகாப்புக்கான அமெரிக்க - கனடா கூட்டு நடவடிக்கையின் அங்கமாக இந்த நடவடிக்கைகள் நடந்தேறின.

தற்போது சீனா தனது பதிலடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. தங்களது வான் எல்லையில் அடையாளம் அறியப்படாத உளவுப் பொருட்கள் பறப்பதாக குற்றம்சாட்டிய சீனா, அவற்றை சுட்டு வீழ்த்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. நீர் பரப்பின் மீதான பறத்தலின்போது அவற்றை வீழ்த்த சீனா முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சீனர்களுக்கு உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. வீழ்த்தப்பட்ட பொருளின் சிதிலங்களை சேகரித்த பின்னரே, அமெரிக்காவுக்கு எதிரான லாபியை முடுக்கவும் சீனா முடிவு செய்துள்ளது. முன்னேற்பாடாக கடந்த 2022ல் மட்டும் சீனாவின் வான் பரப்பில் 10 உளவு பலூன்களை அமெரிக்கா ஊடுருவச் செய்திருப்பதாக நேற்று(பிப்.13) குற்றம்சாட்டியது.

இதற்கிடையே சீன வான் எல்லையில் தற்போது தட்டுப்பட்டிருக்கும் அடையாளம் அறியப்படாத பறக்கும் பொருள் மற்றும் அமெரிக்கா - கனடாவில் வீழ்த்தப்பட்ட 2 பறக்கும் பொருட்கள் ஆகியவற்றை முன்வைத்து, மற்றுமொரு பீதியும் சர்வதேச அளவில் கிளம்பியுள்ளது. பூமியை கண்காணிக்க அவ்வப்போது ஏலியன்கள் அனுப்பும் உளவு சாதனங்களே அவை என்றும், அவற்றை தாக்குவது ஏலியன்களை சீண்டுவதாக அமைந்துவிடும் என்றும் கிளப்பி விடுகிறார்கள்.

’அமெரிக்கா - சீனா இடையிலான அநாவசிய மோதலால், பூமிக்கு அப்பாலான ஏலியன்களின் விரோதத்தை ஒட்டுமொத்த உலக நாடுகள் சம்பாதிப்பதாகவும், 2 வல்லரசுகளும் ஒன்றிணைந்து ஏலியன்கள் தொடர்பான உளவு மற்றும் களவு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்’ என்றும் கோரி வருகிறார்கள்.

இவற்றை எலான் மஸ்க் உட்பட பரவலாக பலரும் பகடி செய்து வந்தபோதும், அமெரிக்கா - சீன மோதல் மத்தியில் ஏலியன்கள் சீண்டலுக்கு ஆளாவதாக அவற்றை நம்புவோர் கவலை தெரிவித்து வருகின்றனர். ஏராளமான நாடுகளின் வான் பரப்பில் அடையாளம் அறியப்படாத பறக்கும் பொருட்கள் தட்டுப்பட்டிருப்பதும், ஏலியன் தொடர்பான கருத்துருவாக்கத்துக்கு அவை உதவி வருவதும் நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT