-
-
தேசம்

முதல்வர் உதவியாளர் வீட்டில் ‘ஏகே-47’ துப்பாக்கிகள்: அதிர்ந்துபோன அமலாக்கத் துறை அதிகாரிகள்

காமதேனு

சுரங்க முறைகேடு தொடர்பாக. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திவரும் சோதனையில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் வீட்டில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

100 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகக் கூறப்படும் சுரங்க முறைகேடு தொடர்பாக, ஜார்க்கண்ட், பிஹார், டெல்லி, தமிழகம் எனப் பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷின் வீட்டில் இன்று நடந்த சோதனையின்போது இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

வீட்டின் அலமாரியில் இந்தத் துப்பாக்கிகள் இருந்ததைப் பார்த்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இவை சட்டவிரோதமானவையா என்பது குறித்து விசாரணையில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

முதல்வர் ஹேமந்த் சோரனின் மற்றொரு உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா, அவரது கூட்டாளி பச்சு யாதவ் ஆகியோர் ஏற்கெனவே அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். அவர்கள் இருவரும் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பிரேம் பிரகாஷின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, முதல்வர் ஹேமந்த் சோரனோ, பிரேம் பிரகாஷோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT