லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் இந்தியா திரும்புகிறார் லாலு பிரசாத்: மகள் உணர்ச்சிகரமான கோரிக்கை
தேசம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் இந்தியா திரும்புகிறார் லாலு பிரசாத்: மகள் உணர்ச்சிகரமான கோரிக்கை

காமதேனு

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அவரது மகள் ரோகினி ஆச்சார்யா, அவர் நாடு திரும்பியதும் பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தனது தந்தையின் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் இன்று இந்தியா திரும்புகிறார். இந்த நிலையில் தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் செய்த லாலுவின் மகள் ரோகினி ஆச்சார்யா, ட்விட்டரில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவைப் பகிர்ந்துள்ளார்

அந்தப் பதிவில் ரோகிணி ஆச்சார்யா,“முக்கியமான விஷயம் சொல்லணும். இந்த முக்கியமான விஷயம் நம்ம தலைவர் லாலு ஜியின் உடல்நிலை.. அப்பா பிப்ரவரி 11-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்கிறார். ஒரு மகளாக என் கடமையைச் செய்கிறேன். அப்பாவை ஆரோக்கியமாக்கிய பிறகு அவரை உங்கள் அனைவருக்கும் மத்தியில் அனுப்புகிறேன். இனி நீங்கள் அனைவரும் என் தந்தையை கவனித்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அப்பா மீதான உங்கள் அன்பு எல்லையற்றது. என் தரப்பில் இருந்து உங்கள் அனைவருக்கும் நான் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். இந்தியா வந்த பிறகு என் தந்தையை நீங்கள் சந்திக்கும்போதெல்லாம், அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவரின் உடல்நிலை குறித்து கவனமாக இருங்கள்" என தெரிவித்தார்.

மற்றொரு ட்வீட்டில், "அவரை யாராவது சந்திக்க வேண்டும் என்றால், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். யாரையாவது சந்திக்கும் போது அப்பாவும் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனையின்படி எனது தந்தை அனைத்து வகையான தொற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார் என்பது மிகவும் முக்கியம்.அதனால் என் அப்பா நிறைய பேரை சந்திக்க முடியாது " என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, லாலுவின் மகனும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தனது ட்வீட்டில்,"எனது தந்தையின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு, அவர் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து ஐசியுவுக்கு மாற்றப்பட்டார். என் மூத்த சகோதரி ரோகினி ஆச்சார்யா மற்றும் தலைவர் இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி" என தெரிவித்தார்.

74 வயதான லாலு சில காலமாக கடுமையான சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவரது மகள் ரோகினி அவருக்கு நன்கொடை அளிக்க முன்வந்தார். அவரது குடும்பம் சிங்கப்பூரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுத்தது. ரோகினி ஆச்சார்யா, ராவ் சம்ரேஷ் சிங் என்பவரை மணந்து சிங்கப்பூரில் வசிக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

SCROLL FOR NEXT