தேசம்

உலகின் 3 வது பெரிய பணக்காரர் ஆனார் கௌதம் அதானி: அம்பானிக்கு என்ன இடம்?

காமதேனு

புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்யும் Louis Vuitton -ன் தலைவரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் தொழில் அதிபர் கௌதம் அதானி உலகின் மூன்றாவது பணக்காரர் ஆக உயர்ந்தார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் ஆசிய நபர் ஒருவர் இடம்பிடிப்பது இதுவே முதல் முறையாகும். சமீப ஆண்டுகளில் கௌதம் அதானியின் சொத்துமதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது, 2022ல் மட்டும் அவரது நிகர சொத்து மதிப்பு 60.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இது மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிகம் ஆகும்.

137 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன், அதானி இப்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 251 பில்லியன் டாலராகவும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 153 பில்லியன் டாலராகவும் உள்ளது. எலான் மஸ்க் மற்றும் பெசோஸ் ஆகிய இருவரின் சொத்து மதிப்பும் இந்த ஆண்டு சரிவைக் கண்டுள்ளது. மஸ்க்கின் நிகர சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 19 பில்லியன் டாலரும், பெசோஸின் நிகர சொத்து மதிப்பு 39 பில்லியன் டாலரும் குறைந்துள்ளது.

அதானி குழுமம் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகம் மற்றும் விமான நிலைய ஆபரேட்டராக உள்ளது. மேலும், நகர-எரிவாயு விநியோகம், சுரங்கம், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ஊடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மற்றொரு பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, இந்த பட்டியலில் 11 வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்துமதிப்பு 91.9 பில்லியன் டாலராக உள்ளது.

SCROLL FOR NEXT