தேசம்

ஆவடி சிறுமி தான்யா எப்படி இருக்கிறார்?- புகைப்படத்தை வெளியிட்டது மருத்துவமனை

காமதேனு

அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள சிறுமி தான்யா தற்போது எப்படி இருக்கிறார் என்பதை விளக்கும் வகையில் அவரது புகைப்படத்தை அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகேயுள்ள வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் சௌபாக்கியம் தம்பதியின் மகள் தான்யா (9) அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் பாதிப்பு குறையவில்லை. தான்யாவின் முகம் வலது கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைவு ஏற்பட்டதால் முகம் மிகவும் பாதிப்படைந்தது.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு சிறுமி தான்யா விடுத்திருந்த கோரிக்கை பலராலும் பகிரப்பட்டு முதல்வர் ஸ்டாலினை எட்டியது. அவர் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை அருகேயுள்ள சவிதா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறுமிக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன் வந்தது. இதையடுத்து அங்கு சேர்க்கப்பட்ட சிறுமிக்கு கடந்த மாதம் 23-ம் தேதியன்று 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு 8 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முகசீரமைப்பு செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று சிறுமி தான்யாவை சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில் நேற்று சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் தான்யாவின் முகம் சீரமைக்கப்பட்ட நிலையில் தற்போதுள்ள அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பகுதி பெருமளவில் குணமடைந்த நிலையில் சிறுமி காணப்படுகிறார். எதிர்வரும் 9-ம் தேதியன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாகவும் மருத்துமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT