வடமாநில தொழிலாளி மரணம்
வடமாநில தொழிலாளி மரணம்  காதில் ரத்தம் வழிய இறந்த வடமாநில தொழிலாளி: தூத்துக்குடியில் பரபரப்பு
தேசம்

காதில் ரத்தம் வழிய இறந்த வடமாநில தொழிலாளி: தூத்துக்குடியில் பரபரப்பு

காமதேனு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணி செய்துவந்த வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மோகனுகுமார்(28) என்ற வாலிபர், தூத்துக்குடி புதிய அனல்மின் நிலையத்தில் மெக்கானிக் உதவியாளராக பணி செய்து வந்தார். ஒப்பந்த ஊழியரான இவர் இதற்காகவே, தூத்துக்குடி தெர்மல் கோவில் பிள்ளை 2-வது தெருவில் தங்கியிருந்து வேலைசெய்து வந்தார். இவருக்கு தினசரி இரவு நேர டியூட்டியாகும்.

இதன்படி வழக்கம் போல் நேற்று இரவு மோகனுகுமார் பணிக்குச் சென்றார். நள்ளிரவில் அவர் கழிப்பறை சென்றார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் உடனே ஓடிச் சென்றுப் பார்த்தனர். அப்போது கீழே விழுந்ததில் அவரது காதில் இருந்து ரத்தம் வடிந்தது. பின் தலையிலும் பலத்தக் காயம் ஏற்பட்டு இருந்தது.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், மோகனுகுமாரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தெர்மல் நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோகனுகுமார் உயிரிழந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களும் அங்கிருந்து கிளம்பி வருகின்றனர். இச்சம்பவம் சக தொழிலாளிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT