தேசம்

சிக்கன் சமைக்காததால் திருமணம் திடீரென நிறுத்தம்: அடிதடியில் ஈடுபட்ட இருவீட்டாரால் பரபரப்பு

காமதேனு

கோழிக்கறி சமைக்காததால் ஏற்பட்ட மோதலால் திருமணம் ஒன்று தடைபட்ட சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது.

திருமணம் திடீர் என தடைபடுவதற்கு வரதட்சணையோ, காதல் விவகாரங்களோ காரணமாக அமையும். ஆனால், ஹைதராபாத்தில் ஒரு திருமணம் தடைபட கோழிக்கறி காரணமாகி விட்டது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஷாபூர் நகரில் ஜகத்கீரி குட்டாரிங் பஸ்தியைச் சேர்ந்த மணமகனுக்கும், குத்புல்லாபூரைச் சேர்ந்த மணமக்களுக்கும் நேற்று அதிகாலை 3 மணியளவில் திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக நேற்று முன்தினம் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகனும், மணமகளும் பிஹாரைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சைவ உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் விருந்து முடிந்து சென்று விட்டனர்.

கடைசியாக மாப்பிள்ளையின் நண்பர்கள் சாப்பிட வந்தனர். அப்போது கோழிக்கறி ஏன் சமைக்கவில்லை என்று அவர்கள் சாப்பிடாமல் கோபித்துக் கொண்டு சென்றனர். இந்த விஷயம் மணமகனின் உறவினர்களுக்குத் தெரிய வந்ததும், மணமகள் தரப்பினரிடம், நாங்கள் விரும்பியதை நீங்கள் பரிமாறவில்லை என்று தகராறு செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பமாக மாறியது. இதனால் சில மணி நேரங்களில் நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

இந்த தகவல் அறிந்த போலீஸார், இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக இருவீட்டாரும் சமரசமானார்கள். இதையடுத்து நவ.30-ம் தேதி மீண்டும் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் ஒப்புக்கொண்டனர். கோழிக்கறியால் திருமணம் தடைபட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT