சலேத் நிதிக்‌ஷனா
சலேத் நிதிக்‌ஷனா 
தேசம்

எலி மருந்தை கேக் எனச் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்

காமதேனு

இனிப்பு கேக் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 14 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் காரைக்காலில் நடைபெற்றுள்ளது.

காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடியைச் சேர்ந்த ராஜா-ஸ்டெல்லா மேரி தம்பதியரின் மகள் சலேத் நிதிக்‌ஷனா(14). அருகிலுள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு வரை படித்துவந்த இவருக்கு திடீர் என்று தசை சுருக்க நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் கடந்த ஆண்டு முதல் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நோய் பாதிப்பு காரணமாக இவரால் சரியாக நடக்க இயலாமல் சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடப்பார்.


இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் வாந்தி எடுத்துள்ளார். அது குறித்து அவரது தாயார், சலேத் நிதிக்‌ஷனாவிடம் விசாரித்தபோது கேக் சாப்பிட்டதாக சொல்லி இருக்கிறார். வீட்டில் கேக் எதுவும் வாங்கி வைக்கவில்லையே என்று திகைத்த ஸ்டெல்லா மேரி எங்கிருந்தது என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் எலிக்காக வைத்திருந்த இடத்தை சிறுமி காண்பித்திருக்கிறார்.

அதன்பிறகே இனிப்பு கேக் என தவறாக நினைத்து வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டது தெரிய வந்ததையடுத்து உடனடியாக அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து கோட்டுச்சேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காரைக்காலில் கடந்த வாரம் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரத்தையடுத்து, எலி மருந்து போன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT