தேசம்

ஒரே வருடத்தில் 200 ஆடுகளைத் திருடி விற்ற கும்பல்: காரில் வந்த போது போலீஸிடம் சிக்கியது

காமதேனு

தொடர்ந்து பல நாட்களாக ஆடுகளைத் திருடிக் கொண்டு போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த ஆடு திருடும் கும்பல்  போலீஸாரின் வாகனச்சோதனையில் சிக்கிக் கொண்டுள்ள சுவாரசியம்  கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்  குமராட்சி, புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து  ஆடுகள் திருடு போய்க் கொண்டிருந்தன.  இதனால் பாதிக்கப்பட்ட ஆடு வளர்ப்போர், குமராட்சி மற்றும் காட்டுமன்னார்குடி காவல் நிலையங்களில் புகார்கள் தெரிவித்திருந்தனர். இதனால் ஆடு  திருடும் கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில்,  விருதாச்சலம் அடுத்த ஊமங்கலம் டோல்கேட் அருகே போலீஸார் நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில்  6 ஆடுகள் இருந்தது. அதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து கொண்டிருந்தபோது, காரில் இருந்தவர்களில் இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர்.  மீதமுள்ள இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அவர்களின்  விசாரணையில் அந்த ஆடுகள்  குமராட்சி பகுதியில் திருடப்பட்டவை என்பதும், அவற்றைச்  சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.  இதனால் விருத்தாசலம் போலீஸார் இது குறித்து குமராட்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் இதனை அறிந்த குமராட்சி இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீஸார் கார் மற்றும் ஆடுகளைப் பறிமுதல் செய்து 2 பேரையும் விசாரணைக்காக குமராட்சிக்கு அழைத்து வந்தனர்.

அங்கு நடைபெற்ற விசாரணையில்  அவர்கள் காட்டுமன்னார்கோவில் மா.கொளக்குடி புதுத்தெருவை சேர்ந்த தாஸ் மகன் பாலகுரு(25),  டி.நெடுஞ்சேரி முருகன் கோயில் தெரு பசுபதி மகன் மணிகண்டன்(25) என்பதும், இவர்கள்தான் குமராட்சி சுற்றுவட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆடுகளை திருடுபவர்கள் என்பதும் தெரிய வந்தது. அதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து  அவர்களை  கைது செய்தனர். 

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்  தப்பியோடிய டி.நெடுஞ்சேரி வடக்குத் தெரு செல்வம் மகன் சிபிராஜ்(21), வடமூர்  கிழக்குத்தெரு  அருள்குமார் மகன் விக்ரம்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கடந்த ஒர்  ஆண்டுக்கு மேலாக ஆடி திருடி வந்த 4 பேரும், இது வரை 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆடு திருடும் கும்பல் அகப்பட்டுள்ளதால் அப்பகுதி ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

SCROLL FOR NEXT