சுமதி
சுமதி  
தேசம்

பசுந்தேயிலை பறித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம்: நீலகிரியில் நடந்தது என்ன?

காமதேனு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை காரணமாக மரம் விழுந்ததால் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயமடைந்தார்.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுகின்றன. மேலும், சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

தொடர் மழை காரணமாக கோத்தகிரி சாலை மைனாலா பகுதி, ஓட்டல் மொனார்க் சாலை, அரசு கலைக்கல்லூரி சாலை பகுதிகளில் மரங்கள் விழுந்தன. இதேபோல் உதகை அவலாஞ்சி சாலையில் இத்தலார் பகுதி மற்றும் எல்லகண்டி பகுதிகளில் சாலையில் மரங்கள் விழுந்தன.

ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பெருமாள் தலைமையிலான குழுவினர் பொக்லைன் மூலம் மண் சரிவை அகற்றினர். இதேபோல் உதகை, தலைக்குந்தா, கல்லட்டி, பேரார், தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே விழுந்த மரங்களை தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று அகற்றினர். நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களில் மட்டும் 16 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன.

மண்சரிவு

கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கெல்லி தனியார் தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளி சுமதி(52).இன்று வழக்கம்போல் சக தொழிலாளிகளுடன் பசுந்தேயிலை பறித்துக்கொண்டிருந்தார். மாலை மூன்று மணியளவில் அங்கிருந்த மரம் ஒன்று திடீரென்று விழுந்தது. இதில் மரத்தின் அடியில் சிக்கிக் கொண்ட சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பணிபுரிந்த முத்தம்மாள்(54) என்பவர் பலத்த காயமடைந்தார்.

அவரை மீட்ட சக தொழிலாளர்கள் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி செய்யப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்மழை காரணமாக மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்துள்ளதால் வேர் வலுவிழந்து மரம் சாய்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் வெளியே செல்லும்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT