தேசம்

கூண்டில் சிக்கியது ஒரு கரடி; ஊருக்குள் மறைந்திருக்கும் 2 கரடிகள்: அச்சத்தில் களக்காடு மக்கள்

காமதேனு

திருநெல்வேலி மாவட்டம், பூதத்தான் குடியிருப்பில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர். இன்னும் இரு கரடிகள் ஊருக்குள் சுற்றிவருவதாகவும் அவற்றையும் பிடிக்குமாறும் வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் ஊருக்குள் கரடி புகுவது தொடர்கதையாகி வருகிறது. நேற்றுகூட அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோட்டைவிளைப்பட்டி கிராமத்தில் ஊருக்குள் புகுந்த கரடி, கலையரசி(40) என்ற பெண்ணைத் தாக்கியது. அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதேபோல் களக்காடு அருகில் உள்ள பூதத்தான் குடியிருப்பு பகுதியிலும் கடந்த ஒருவாரமாக மூன்று கரடிகள் வனத்திற்குள் இருந்து ஊருக்குள் புகுந்து மக்களை மிரட்டி வந்தன. இதுகுறித்து களக்காடு வனத்துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் சென்றன. வனத்துறையினரின் தொடர் ஆய்வில் வேம்படி பகுதியில் இருக்கும் சுடலைமாட சுவாமி கோயிலில் விளக்கு ஏற்றும் எண்ணெய்யை குடிப்பதற்காகவே கரடிகள் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுற்றிவருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கடந்த 20-ம் தேதி முதலே கூண்டு வைத்து காத்திருந்தனர் வனத்துறையினர். இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் ஆண் கரடி ஒன்று அந்த கூண்டில் சிக்கியது.

பிடிபட்ட கரடியானது மிரண்டு போய் கூண்டில் அடிக்கடி மோதியதால் அதன் உடலில் ஆங்காங்கே ரத்தக்காயங்களும் ஏற்பட்டுள்ளன. கரடியை அடர் கானகத்தில் கொண்டுவிட வனத்துறையினர் பணியைத் தொடங்கியுள்ளனர். இதனிடையே இன்னும் இரு கரடிகள் ஊருக்குள்ளேயே பதுங்கி இருப்பதாகவும் அவற்றையும் வனத்துறையினர் விரைவில் பிடித்து, காட்டுக்குள் விட வேண்டும் எனவும் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT