தேசம்

கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 800 கிலோ குட்கா: மடக்கி பிடித்த தனிப்படை

காமதேனு

கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த தஞ்சை தனிப்படை போலீஸார் இது தொடர்பாக 5 பேரை கைது செய்ததுடன் 2 கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும், இந்த போதைப் பொருட்களைக் கடத்தி வருபவர்களைக் கைது செய்யவும் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டிருந்தார்.  அதனையடுத்து   சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன், ஏட்டு இளையராஜா, போலீஸ்காரர்கள் சுந்தர்ராமன், ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய  தனிப்படை அமைக்கப்பட்டு போதைப் பொருட்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா என்ற போதைப்பொருள் கர்நாடக மாநிலத்தில் இருந்து தஞ்சைக்குக் கடத்தி வரப்படுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படையினர் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகர் பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அடுத்தடுத்து அந்த வழியாக வேகமாக வந்த  2 கார்களையும் தனிப்படையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது கார்களின் பின்பகுதியில் மூட்டை, மூட்டையாக குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த மொத்தம் 800 கிலோ குட்காவையும்  பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக தஞ்சை கொல்லாங்கரையை சேர்ந்த ராஜேஷ், கருணாவதி நகரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அசோக், கும்பகோணத்தைச் சேர்ந்த துளசி, திருவாரூரைச் சேர்ந்த கார்த்தி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்த தனிப்படையினரை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி பாராட்டினார்.

SCROLL FOR NEXT