தேசம்

8 யூடியூப் செய்தி சேனல்களை முடக்கிய மத்திய அரசு: என்ன காரணம்?

காமதேனு

7 இந்திய யூடியூப் சேனல்கள், ஒரு பாகிஸ்தான் சேனல் என மொத்தம் 8 யூடியூப் சேனல்களை முடக்கியிருக்கிறது மத்திய அரசு. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (2021) அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 16-ம் தேதி இந்த உத்தரவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் பிறப்பித்திருக்கிறது.

தடையின் பின்னணி

8 யூடியூப் செய்தி சேனல்களுடன் ஒரு ஃபேஸ்புக் கணக்கு, இரண்டு ஃபேஸ்புக் பதிவுகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. ‘இவற்றில் சில சேனல்கள், மதச் சமூகங்களுக்கு இடையே வெறுப்பைப் பரப்பும் வகையிலான தகவல்களை வெளியிட்டன; வழிபாட்டுத் தலங்களை இடிக்க அரசு உத்தரவிட்டதாகவும், மதரீதியிலான பண்டிகைகளைக் கொண்டாடத் தடை விதித்ததாகவும், மத அடிப்படையிலான போரை அறிவித்ததாகவும் தவறான செய்திகளை இந்த சேனல்கள் பரப்பின’ என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சேனல்கள் வெளியிட்ட தகவல்கள் மத அடிப்படையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்திய ராணுவம், காஷ்மீர் விவகாரம் போன்றவை குறித்த போலிச் செய்திகளை வெளியிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

பிரபல செய்தி சேனல்களின் லோகோ, அவற்றில் பணிபுரியும் அறிவிப்பாளர்கள் போன்றோரின் படங்களைப் பயன்படுத்தி, உண்மையான செய்தி சேனல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இதுபோன்ற செயல்களின் இந்த சேனல்கள் ஈடுபட்டுவந்ததாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை கூறியிருக்கிறது.

இந்த யூடியூப் சேனல்கள் மொத்தமாக 114 கோடி பார்வைகளைப் பெற்றிருக்கின்றன. 85 லட்சம் பேர் இந்த சேனல்களின் சந்தாதாரர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் நோக்கம்

உண்மையான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணைய ஊடகச் சூழலை உறுதிசெய்வதில் அரசு தொடர்ந்து முனைப்பு காட்டுகிறது. இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, தேசப் பாதுகாப்பு, வெளியுறவு, பொது அமைதி ஆகியவற்றுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் முறியடிக்கவும் அரசு உறுதிபூண்டிருக்கிறது. அந்த வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடக்கத்தையும் சேர்த்து, 2021 டிசம்பர் மாதம் முதல் இதுவரை 102 யூடியூப் சேனல்களையும், ஏராளமான சமூகவலைதளக் கணக்குகளையும் முடக்கியிருக்கிறது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம்.

(*பயன்படுத்தப்பட்டிருப்பவை மாதிரிப் படங்கள்)

SCROLL FOR NEXT