தேசம்

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேர்: 5 சடலங்கள் மீட்பு: ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில் சோகம்!

காமதேனு

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

தூத்துக்குடியிலிருந்து பூண்டி மாதா கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாகப் பேருந்து மூலம் சுமார் 50 பேர் சென்றுள்ளனர். அதில் சிலர் நேற்று காலை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்திருக்கிறார்கள். அப்போது 6 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தீவிரமாகத் தேடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

பல மணிநேரம் தேடுதலுக்குப் பின்பு தூத்துக்குடியைச் சேர்ந்த துரைராஜ் மகன்கள் சார்லஸ், பிரிதிவிராஜ் ஆகியோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து துரைராஜின் மற்றொரு மகனான தாவித் நேற்று மதியம் சடலமாக மீட்கப்பட்டார். அடுத்த சில மணி நேரத்தில் பிரவிராஜ் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். கெர்மஸ் என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். ஈசாக் என்பவரைத் தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் அவரை மீட்கும் பணியில் சிக்கல் நீடித்து வருகிறது.

SCROLL FOR NEXT