தேசம்

`நீட்' தேர்வால் மன உளைச்சல்; 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் அதிர்ச்சி தகவல்

காமதேனு

மன உளைச்சலில் உள்ள 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 497 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம் 3,570 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். 7 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் நீட் தேர்வை எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதன் காரணமாக பொறியியல் கலந்தாய்வும் தள்ளிப்போனது. இந்நிலையில் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்றுவெளியிடுகிறது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் மன உளைச்சலில் இருக்கும் மாணவர்கள் விபரீதமாக முடிவுகளை எடுத்து வருகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழகத்தில் இருந்து மட்டுமே குரல் ஒலிக்கிறது. மற்ற மாநிலங்கள் அமைதி காத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மன உளைச்சலில் உள்ள 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

"நீட் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 988 மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மன உளைச்சலில் உள்ள 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மன நெருக்கடி இருந்தால் மனநல ஆலோசனை குழுக்களை அணுகி ஆறுதல் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியானதும் பெற்றோர் மாணவர்களை கடுமையாக திட்டுவதை தவிர்க்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

SCROLL FOR NEXT