தேசம்

மோடியின் சொந்த மாநிலத்தில் 8 மாதங்களில் 50 பேருக்குத் தூக்கு: நடுங்க வைக்கும் தீர்ப்புகள்

காமதேனு

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 8 மாதங்களில் 50 பேருக்கு நீதிமன்றங்கள் தூக்குத்தண்டனை வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தண்டனைகள் அதிகபட்சமாக வழங்க வேண்டும் என்று ஒருபுறமும், தூக்குத்தண்டனை வழங்கக்கூடாது என்று ஒருபுறமும் குரல்கள் எதிரொலிக்கின்றன. நீதிமன்றங்கள் மூலம் குற்றம் இழைத்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பது நோக்கமாக உள்ளது. இதில் தூக்குதண்டணை அல்லது மரண தண்டணை அரிதாகவே வழங்கப்படுகிறது.

அதன்படி கடந்த 2006- ஆண்டு முதல் 2021 -ம் ஆண்டு வரை குஜராத் மாநில விசாரணை நீதிமன்றத்தில் 46 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் கடந்த மாதம் வரையிலான 8 மாதங்களில் 50 பேருக்கு விசாரணை நீதிமன்றங்கள் தூக்கு தண்டனை வழங்கியுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 50 பேரில் 38 பேர் 2002-ம் ஆண்டு நடைபெற்ற அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர். 2002-ம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், பொது மக்கள் 56 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கியது.

மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்து அவர்களைக் கொலை செய்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், ஆணவக் கொலை வழக்கில் 2 பேர் என குஜராத் மாநில பல்வேறு நகரங்களில் உள்ள நீதிமன்றங்கள் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளன.கடந்த 15 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை எண்ணிக்கையை நடப்பு ஆண்டிலான 8 மாத தூக்குத்தண்டனை எண்ணிக்கை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT