தேசம்

திருப்பூர் சாயப்பட்டறையில் வேலை செய்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது

காமதேனு

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கி சாயப்பட்டறையில் வேலை செய்து வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகர் மங்கலம் சாலையில் நேற்று இரவு சோதனைச்சாவடி பகுதியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 5 வடமாநில இளைஞர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. முறைகேடாக திருப்பூர் பெரியாண்டிபாளையம் எஸ்ஆர்நகர் பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. அதேபகுதியில் உள்ள சாயப்பட்டறை ஆலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அத்துடன் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை முறைகேடாக பெற்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக சாய ஆலை நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், வெளிநாட்டு வாழ் தடைச் சட்டத்தின் கீழ், ரஷீத்சேக்(34), முகமத் சோஹித்(26), ரஷிதுல்(28), மிஷன்கான் (28) மற்றும் சுமன் மசூந்தர் (26) ஆகியோரை திருப்பூர் மத்திய போலீஸார் இன்று கைது செய்தனர். இவர்கள் ஐந்து பேரும் வங்கதேச நாட்டைச் சேர்ந்த சுகரா, குல்னா மற்றும் ஜட்ரா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

SCROLL FOR NEXT