தேசம்

குஜராத்தில் நிலநடுக்கம் - அரபிக்கடலில் எபிசென்டர்: அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்

காமதேனு

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎஸ்ஆர்) தெரிவித்துள்ளது. சூரத்தின் மேற்கு தென்மேற்கு பகுதியில் சுமார் 27 கிலோமீட்டர் தொலைவினை எபிசென்டராகக் கொண்டு நள்ளிரவு 12:52 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நிலநடுக்கம் 5.2 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது, மேலும் இந்த நிலநடுக்கத்தின் எபிசென்டர் சூரத் மாவட்டத்தில் உள்ள ஹசிராவிற்கு அப்பால் அரபிக்கடலில் இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (GSDMA) தகவல்களின்படி, மாநிலம் அதிகளவிலான நிலநடுக்க அபாயத்தை எதிர்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் 1819, 1845, 1847, 1848, 1864, 1903, 1938, 1956 மற்றும் 2001ம் ஆண்டுகளில் மிகப்பெரிய நிலநடுக்கங்களை எதிர்கொண்டது. 2001ல் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் மற்றும் 1.67 லட்சம் பேர் காயமடைந்தனர்.

SCROLL FOR NEXT