தேசம்

31 பேர் பலி; 19 லட்சம் பேர் பாதிப்பு: அசாம், மேகாலயாவில் கோரத்தாண்டவமாடும் கனமழை

காமதேனு

கடந்த இரண்டு நாட்களில் அசாம் மற்றும் மேகாலயாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாமின் 28 மாவட்டங்களில் சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு லட்சம் பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அசாமில் 12 பேரும், மேகாலயாவில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அங்கு ஆறு மணி நேரத்தில் 145 மிமீ மழை பெய்துள்ளது. அருணாச்சல பிரதேசத்திலும் பல பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அசாமில் சுமார் 3,000 கிராமங்கள் மற்றும் 43,000 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பாலங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என அம்மாநில அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் மூன்று குழந்தைகளைக் காணவில்லை என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சிக்கித் தவிக்கும் மக்களுக்காக கவுஹாத்தி மற்றும் சில்சார் இடையே சிறப்பு விமானங்களை இயக்க அசாம் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மேகாலயா மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் கன்ராட் சங்மா அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள நிலைமை குறித்து கேட்டறிந்ததோடு, மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

SCROLL FOR NEXT