தேசம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 30 லட்சம் கடன்: திருடனாக மாறிய போலீஸ்காரர் கைது

காமதேனு

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 30 லட்ச ரூபாய் கடனாளியான போலீஸ்காரர், நண்பர் வீட்டில் நகைத் திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அமல்தேவ் கே.சதீசன் (35). இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் எர்ணாகுளம் வைபின் ஞாறக்கல் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவர் அமல்தேவின் நண்பராவார்.

இந்த நிலையில், நடேசன் வீட்டில் அக்.16-ம் தேதி 10 பவுன் நகை திருடு போனதாக நாரக்கல் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நடேசன் வீட்டிற்கு அடிக்கடி அமல்தேவ் வந்து போனதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக நடேசனின் மனைவி போலீஸில் கூறியுள்ளார்.

இதையடுத்து அமல்தேவிடம் போலீஸார் நேற்று விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. தனது நண்பர் வீட்டில் அக்.13-ம் தேதி நகையைத் திருடியதாக அமல்தேவ் ஒப்புக்கொண்டார். கடந்த சில நாட்களாக நடேசன் வீடு பூட்டப்பட்டிருந்ததால், அக்.16-ம் தேதி தான் நகைத்திருட்டு சம்பவம் தெரிந்துள்ளது. திருடப்பட்ட நகைகளின் ஒரு பகுதியை உள்ளூர் நிதிநிறுவனத்தில் அமல்தேவ் அடகு வைத்துள்ளார். மீதமுள்ள நகைகளை அவர் விற்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," குற்றம் சாட்டப்பட்ட அமல்தேவ் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவருக்கு ரூ.30 லட்சம் கடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததால் கிடைத்த தொகை முழுவதையும் அதிலேயே செலவழித்துள்ளார். இதன் காரணமாக அவர் நண்பர் வீட்டில் திருடியுள்ளார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். திருடு போன நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் " என்றனர். ஆன்லைன் விளையாட்டால் ஒரு போலீஸ்காரரே திருடனாக மாறிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT