தேசம்

கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டு சிறை: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

காமதேனு

சபரிமலைக்கு செல்பவர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நவம்பர் 17-ம் தேதி தொடங்கியது. கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நவம்பர் 16-ம் தேதி நடையை திறந்துவைத்து, கருவறையில் தீபம் ஏற்றினார். தொடர்ந்து, கோயில் முன்புள்ள ஆழி குண்டம் ஏற்றப்பட்டது. அன்று மாலை 6 மணியளவில் அபிஷேகம் நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நவம்பர் 17-ம் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டு ஐயப்பனை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி, சபரிமலையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். டிசம்பர் 27-ம் தேதியோடு மண்டல பூஜை முடிந்து சபரிமலை நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் லட்சக்கணக்கானோர் ரயில்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில், ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதை தடுக்க, சேலம் ரயில்வே போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சபரிமலைக்கு ரயில்களில் செல்லும் ஐயப்ப பக்தர்கள், அதிகாலையில் எழுந்து வழிபாடு நடத்துவதுடன், கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், ரயிலில் தீ விபத்து ஏற்படும வாய்ப்புள்ளதால், ரயில்வே துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, சேலம் வழியாக கேரளாவிற்கு செல்லும் ரயில்களில், ரயில்வே போலீஸார், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், மீறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT