தேசம்

பால் லாரி மீது மோதிய கார்: துக்க வீட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் பலியான பரிதாபம்

காமதேனு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பால் லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் துக்க வீட்டுக்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வந்தாரவல்லி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பையன். திருக்கோவிலூர் பகுதியில் நடைபெற்ற இவரது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று இவர் மனைவி அவரஞ்சி, மகன் பழனி ஆகியோருடன் ஒரு காரில் புறப்பட்டுள்ளார். அவர்களுடன் உறவினர்கள் தங்கவேலு, மகாலிங்கம் ஆகியோரும் வந்துள்ளனர்.

திருக்கோவிலூருக்கு வந்து துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிடடு இன்று காலை மீண்டும் போச்சம்பள்ளிக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்களது கார் செங்கம் அடுத்த தண்டம்பட்டு பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து தண்டராம்பட்டுக்குப் பால் ஏற்றிச் செல்வதற்காக லாரி ஒன்று எதிரே வந்துகொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக காரும், அந்த லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சின்னப்பையன் மற்றும் அவரது மனைவி அவரஞ்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அவரது மகன் பழனி, உறவினர்கள் தங்கவேலு மகாலிங்கம் ஆகிய 3 பேரையும் மீட்ட போலீஸார் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியும் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மேல் செங்கம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பது போச்சம்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT