தேசம்

2 லட்சம் முதலீடு செய்தால் 7 லட்சம் சம்பாதிக்கலாம்: இன்ஸ்டாகிராம் தோழியால் பணத்தை இழந்த ஐடி பெண் ஊழியர்

காமதேனு

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழகிய தோழியின் பண ஆசை வலையில் சிக்கிய ஐடி பெண் ஊழியர் 2 லட்சத்தை இழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் புதுரோடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகள் விஷ்ணு பிரியா. இவர் சென்னையில் உள்ள தகவல் தொழில் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். பிப்.19-ம் தேதி இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால், ரூ.2.50 லட்சம் சம்பாதிக்கலாம் என அவரது தோழி ஒருவர் கூறியிருந்தார்.

இது குறித்து விஷ்ணு பிரியா கேட்டபோது அவர் இன்னொரு நபரை அறிமுகப்படுத்தினார். பிட் காயின் திட்டத்தில் இணைந்து முதலீடு செய்தால் 7 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய விஷ்ணு பிரியா தனது வங்கிக் கணக்கில் இருந்து, அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்கு எண்ணுக்கு 8 தவணைகளில் 2 லட்சம் செலுத்தினார்.

அதற்குரிய லாபத்தொகையை விஷ்ணு பிரியா கேட்டபோது பதில் இல்லை. இது தொடர்பாக தனது தோழியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டபோது, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிவிட்டார். இதன் பின்னர் ஆன்லைன் பணமோசடி கும்பலிடம் ஏமாற்றமடைந்ததை அறிந்தார்.

இதையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தன்னை ஏமாற்றி பண மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தான் இழந்த தொகையை மீட்டுத் தர வேண்டும் என காவல்துறை இணைய தள முகவரியில் விஷ்ணுபிரியா புகார் பதிவு செய்தார். இதனடிப்படையில், ராமநாதபுரம் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT