தேசம்

தீபாவளி பண்டிகைக்காக 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துதுறை அறிவிப்பு!

காமதேனு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அக்டோபர் 24-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். எனவே, தீபாவளிக்காக தமிழகத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை மற்றும் படிப்பிற்காக தங்கியுள்ளவர்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். குறிப்பாக சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிக்கைக்காக தங்களது சொந்த ஊருக்குச் செல்வார்கள். இதனால் , ஆண்டு தோறும் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தீபாவளி பண்டிக்கைக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் இருந்து தீபாவளிக்காக 16,688 சிறப்பு பேருந்துக்களை இயக்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மட்டும் கோயம்பேடு, தாம்பரம் சானிட்டோரியம், பூந்தமல்லி உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பிற மாவட்ட தலைநகரங்களிலும் சிறப்பு பேருந்துக்களை இயக்க திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டுமே 8 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT