தேசம்

சென்னையில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்பிலான 15 பழமையான சிலைகள்: கோயில்களில் திருடப்பட்டதா?

காமதேனு

சென்னையில் ஆவணங்களிலின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 15 தொன்மை வாய்ந்த சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர் பகுதியில் பழமைவாய்ந்த சிலைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸார் சிலைகளை வாங்குவது போல் நடித்து, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த புரோக்கர் சுரேந்திராவிடம் பேசியுள்ளனர். அவர் கூறியது போல் திருவான்மியூர் ஜெயராம் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சிலைகளை வாங்க போலீஸார் சென்றனர்.

போலீஸ் படையைப் பார்த்தவுடன் அங்கிருந்த புரோக்கர் சுரேந்திரா தப்பிச்சென்றார். அவர் கொடுத்த முகவரியில் வசித்து வந்த ரத்தினேஷ் பாந்தியாவை பிடித்து விசாரணை நடத்தினர். அத்துடன் அவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் நீதிமன்ற உத்தரவு பெற்று ரத்தினேஷ் பாந்தியாவுக்குச் சொந்தமான இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 பழங்கால உலோக சிலைகளை மீட்டனர். ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சிலைகளைப் பறிமுதல் செய்த போலீஸார், இந்த சிலைகள் தமிழக கோயில்களில் திருடப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ரத்தினேஷ் பாந்தியாவிடம் தொடர் விசாரணை நடத்தி மேற்கொண்டு வரும் போலீஸார், தப்பி ஓடிய புரோக்கர் சுரேந்திராவை தீவிர தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT