தேசம்

120 வழக்குகள், 18 லட்சம் அபராதம்: பாம்பன் கடலில் இரட்டை வலை மீன்பிடித்ததால் மீன்வளத்துறை அதிரடி

காமதேனு

பாம்பன் கடலில் இரட்டை வலையில் மீன்பிடித்ததாக 120 விசைப்படகு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டித்தருவதில் கடல் உணவு ஏற்றுமதிப்பொருட்கள் முக்கிய வகிக்கிறது. ஆனால், மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் விசைப்படகுகள், நாட்டுப்படகுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மீன்வளத்துறை மூலம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் கடல் வளத்தை அழிக்கும் இரட்டை வலை மீன்பிடி முறைக்கு அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்தநிலையில், ராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதிகளில் இரட்டை வலை மீன்பிடியை பயன்படுத்தி தொழில் செய்து வருவதாக நாட்டுப்படகு மீனவர்கள் குற்றச்சாட்டினர்.

இதைதொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு அமலாக்க பிரிவினர் இணைந்து படகுகள் தொழிலுக்குச் சென்று கரை திரும்பும் நாட்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இக்குழுவினர் ஜன.15-ம் தேதி முதல் பிப்.13-ம் தேதி வரை மேற்கொண்ட ஆய்வில் 15 டன் மீன்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 120 விசைப்படகு உரிமையாளர்கள் மீது சட்ட விதி மீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளதாக ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் கூறினார்.

SCROLL FOR NEXT