தேசம்

‘18 மாதங்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்’ - எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு முகங்கொடுக்கும் மோடி!

காமதேனு

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு, அரசின் பல்வேறு துறைகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். தீவிரமான செயல்திட்டமாக இதை முன்னெடுக்குமாறு மோடி கேட்டுக்கொண்டிருப்பதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மனிதவள மேம்பாட்டுத் துறை நிலவரங்களை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவைப் பிரதமர் மோடி எடுத்திருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவருவதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிவருகின்றன. 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த மோடி, அதை நிறைவேற்றாமல் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி என முந்தையப் பிரதமர்கள் மீது குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. அந்த விமர்சனங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT