கவிதைகள்

நிழற்சாலை

காமதேனு

குருவிகளின் சிவப்பு வானம்

அடர்த்தியான கருவேல மரம்
பசுமையான வயல்வெளியில்
பரந்து விரிந்த தோற்றத்துடன்
வருவோர் போவோர்க்கெல்லாம்
இலவசப் பல்குச்சி அளித்தபடி
காட்சி தருகிறது
கம்பீரமாய்.
வயல்களில் நீர் நிரப்பி
விதைக்கும் தருணம் பார்த்து வந்துசேர்ந்தன
தூக்கணாங்குருவிகள்.
இரண்டு மாதங்களுக்கு மேல்
கட்டிய கூடுகளில்
இப்போது குஞ்சுகள்.
முள் நிறைந்த மரத்தில்
விடாமுயற்சியுடன்
தூக்கணாங்குருவிகள்
பின்னிக்கொண்டிருக்கின்றன
வாழ்தலுக்கான உயிர்ச் சூழலை!

- கா.ந.கல்யாணசுந்தரம்

தனிமை இருள்

இருள் கவ்விய
நீண்ட இரவு நேரங்களில்
ரயில் வரும் வரை காத்திருந்து
யாரும் கடந்துபோகாத
ரயில்வே குறுக்கு கேட்டை
மூடித் திறந்து
பெருமூச்சுவிடும்
அந்தத் தனிமைக் காவலாளியின்
வெம்மை தாங்காமல்
கூடுதல் வேகமெடுத்து
பயணிக்கிறது
ஆயிரம் பேர்
அடங்கிய
அதிவிரைவு ரயில்!

-கோவை.நா.கி.பிரசாத்

SCROLL FOR NEXT