வாழ்க்கை

மூன்று வயது வரை சக குழந்தைகளுடன் விளையாடும் சிறாரின் மனநலன் மேம்படும்!

காமதேனு

குழந்தை வளர்ப்பில் இருக்கும் சவால்கள் குறித்த ஆய்வுகள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. குழந்தைகளின் உடல்நலன், மனநலன், கற்கும் திறன், விளையாட்டில் காட்டும் ஆர்வம் என ஒவ்வொரு விஷயத்திலும் எந்தெந்த வகையில் மேம்பாடு அடையலாம் என்பது குறித்த ஆய்வுகள் குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கும் சமூகத்துக்கும் துணைபுரிகின்றன.

அந்த வகையில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்தியிருக்கும் ஆய்வு, மூன்று வயது வரை சக வயதுள்ளவர்களுடன் விளையாடும் குழந்தைகள் ஏழு வயதாகும்போது அவர்களின் மனநலன் சிறப்பான மேம்பாட்டை அடைந்திருக்கும் என்று தெரிவிக்கிறது.

‘ஆஸ்திரேலியாவில் குழந்தைகளின் வளர்ச்சி’ எனும் பெயரில் சமீபத்தில் 1,700 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட நீண்ட ஆய்வின் முடிவுகளை ஆராய்ந்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றனர்.

பள்ளிக் கல்வி தொடங்குவதற்கு முன்பு சக குழந்தைகளுடன் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளின் மனநலன் மேம்படும் என்று நிறுவும் முதல் ஆய்வு இதுதான் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் ஈடுபடும் விளையாட்டுகளின் எண்ணிக்கையைவிட அவற்றின் தரம்தான் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தங்கள் வயதையொத்த குழந்தைகளுடன் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், முரட்டுத்தனமாக நடந்துகொள்வது, நடத்தைப் பிரச்சினைக்குட்படுவது, உணர்வுசார்ந்த சிக்கல்களைக் கொண்டிருப்பது என்பன போன்ற பிரச்சினைகள் இல்லாமல் பிறருடன் சகஜமாகப் பழகுவதாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் கூறியிருக்கிறார்கள். சக குழந்தைகளுடன் சண்டையிடுதல், கருத்து முரண்பாடு கொண்டிருத்தல் போன்றவையும் அக்குழந்தைகளிடம் குறைவு என்கிறார்கள் ஆய்வாளர்கள். மனநலன் சார்ந்த பிரச்சினைகள் கொண்ட குழந்தைகள், ஏழ்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் பின்தங்கிய நிலையில் இருக்கும் குழந்தைகள், இப்படி சக குழந்தைகளுடன் விளையாடிப் பழகுவது அவர்களுக்கு நல்ல பலனைத் தருவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சக குழந்தைகளுடன் விளையாடும்போது நட்புறவைப் பலப்படுத்திக்கொள்ளும் குழந்தைகள், பள்ளியில் சேர்ந்த சக குழந்தைகளுடனான நட்பைப் பெறுதல், வளர்த்துக்கொள்ளுதல், படிப்பில் கவனம் செலுத்துதல் என சிறந்து விளங்குகிறர்கள் எனச் சொல்லும் ஆய்வாளர்கள், விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல், ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் எனக் குழந்தைகளிடம் நல்ல மாற்றம் தென்படுவதாகவும் கூறுகிறார்கள்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் சக குழந்தைகளுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் குழந்தைகள் இவ்வாறான பலன்களை இழந்திருப்பதால், இனி இவ்விஷயத்தில் குழந்தைகளை ஊக்கப்படுத்துவது பலன் தரும் என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் நல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

‘ஓடி விளையாடு பாப்பா’ என பாரதி சும்மாவா பாடினார்?!

SCROLL FOR NEXT