தலையங்கம்

உள்ளாட்சியில் மகளிர் உன்னத சாதனை புரியட்டும்!

காமதேனு

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பெண்களுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 21 வயது இளம் பெண் முதல் 90 வயது மூதாட்டி வரை வெற்றிபெற்று நம்பிக்கையூட்டியிருக்கிறார்கள். குடும்பங்களின் தேவைகளை நன்கு உணர்ந்த பெண்களின் கைகளில் உள்ளூர் நிர்வாக அதிகாரம் இருக்கும்போது, அரசின் நலத் திட்டங்கள் முறையாகச் சென்று சேர்வதை உறுதிசெய்துகொள்ள முடியும். அந்த வகையில், இதற்கு முன்பும் உள்ளாட்சி அமைப்புகளில் சாதித்த பெண்களின் வரிசையில் புதிதாக வெற்றிபெற்றவர்களும் இடம்பெற வாழ்த்துவோம்.

உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்பவர்கள், எந்த அளவுக்குச் சுதந்திரமாகச் செயல்படுகிறார்களோ அந்த அளவுக்கு நிர்வாகம் சிறப்பாக நடக்கும். ஆணாதிக்கம் நிறைந்த நமது சமூகத்தில், பெண் நிர்வாகிகளின் பெயரால் அவர்களது வாழ்க்கைத் துணைவர், குடும்பத்தினர் என பிறரது தலையீடு இருப்பதை ஆங்காங்கே பார்த்துவருகிறோம். அத்துடன், அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள், கட்சி அமைப்புகளின் ஆதிக்கத்தின்கீழ் அவர்கள் சொல்படி செயல்பட வேண்டிய சூழலும் இருக்கிறது. குறிப்பாக, பெண்கள் இதில் அதிக அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். பாலினம், சாதி அடிப்படையில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமலும், அவமதிப்புகளைச் சுமந்துகொண்டும் பல பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், உள்ளாட்சிப் பதவிகளுக்கான அதிகாரங்கள், பொறுப்புணர்வு என்ன என்பதைப் புதிதாகப் பதவியேற்கும் பெண்கள் உட்பட அனைவருக்கும் உணர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உள்ளாட்சித் துறை நிபுணர்கள், பேராசிரியர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இணைந்த குழு பயிலரங்குகள், பயிற்சிகள் தர ஏற்பாடு செய்யலாம். உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பின்னர், பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது. அந்தப் பங்களிப்பு ஆக்கபூர்வமான பலன்களைத் தருவதை உறுதிசெய்துகொள்வது மிக மிக முக்கியம்!

SCROLL FOR NEXT