imacoconut
imacoconut
தலையங்கம்

மாற்று மின்னுற்பத்தியை அதிகரித்து மாற்றம் காண்போம்!

காமதேனு

திடீரென ஏற்பட்ட மின்வெட்டுப் பிரச்சினையிலிருந்து தமிழகம் ஓரளவு மீண்டிருக்கிறது. எனினும், நாடு முழுவதும் நிலவும் நிலக்கரித் தட்டுப்பாடு இந்தப் பிரச்சினை மேலும் தொடரும் என்பதையே உணர்த்துகிறது. போதாக்குறைக்கு முன்பைவிட அதிகமான அளவில் மின்சாரப் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் மரபுசாரா மின்னுற்பத்தியில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

ஆட்சிக்கு வரும் அனைவரும் ‘தமிழகம் மின்மிகை மாநிலமாகும்’ எனத் தவறாமல் சொல்கிறார்கள். ஆனால், மின்னுற்பத்திக்குப் பெரும் செலவு செய்ய வேண்டியிருப்பதுடன், வெளிமாநிலங்களையும் தனியார் நிறுவனங்களையும் சார்ந்திருக்க வேண்டியதுதான் தமிழகத்தின் நிதர்சனம். மின்சாரத் தேவை அதிகரிக்கும் கோடையில் அடிக்கடி மின்வெட்டுப் பிரச்சினைகள் ஏற்படும்போதுதான் இந்தப் பிரச்சினையின் தீவிரம் பற்றி விவாதங்கள் எழுகின்றன. அதன் பின்னர் இந்தப் பிரச்சினை அடியோடு மறக்கப்படுகிறது.

இதற்குத் தீர்வுகாண மரபுசாரா மின்னுற்பத்தியை அதிகரிப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். சூரிய சக்தி மின்னுற்பத்தியில் தமிழகத்தை முன்னிலை மாநிலமாக்குவதற்காக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2012-லேயே சூரியமின்சக்தி கொள்கையை அவர் அறிமுகப்படுத்தினார். இன்றைய தேதிக்கு தமிழகத்தில் வீடுகளில் சூரிய சக்தி மின் தகடுகள் அமைக்க மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித் துறை 40 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமை 20 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும் சூரிய மின்சக்தியைப் பெறுவதில் மக்களிடம் பெரிய ஆர்வம் முகிழ்க்கவில்லை. இதை மாற்ற அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும். இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை உணர்ந்திருக்கும் உலகம், பசுமை எரிசக்தியின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. நம் பங்குக்கு நாமும் ஆக்கபூர்வமான அந்த முன்னெடுப்பில் பங்கெடுப்போம்!

SCROLL FOR NEXT