JOTHI RAMALINGAM B
JOTHI RAMALINGAM B
தலையங்கம்

மாணவர் எண்ணிக்கை குறைவது அரசுப் பள்ளிகளுக்கு அழகல்ல!

காமதேனு

'அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்' - இப்படித்தான் தமிழக அரசு பெருமிதம் பேசுகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலை உண்மையிலேயே பெருமிதம் தரும் வகையில் இருக்கிறதா என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகியிருக்கிறது. ஆம்! தமிழகத்தின் 78 சதவீத தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை 36.05 சதவீதம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 30-க்கும் குறைவு என்றும், பல பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

உண்மையில், இது திடீரென ஏற்பட்ட சரிவு அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக இந்தப் போக்கு தொடர்ந்து வருவதே நிதர்சனம். இதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் அரசு நிதி உதவியுடன் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதால், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவதாக விமர்சனங்கள் உண்டு. தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகளை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தித் தந்தாலே, மாணவர்களின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு டெல்லி அரசு எடுத்த நடவடிக்கைகள் முன்னுதாரணமாக இருக்கும் நிலையில், அதையெல்லாம் பின்பற்ற அரசு முன்வந்திருக்க வேண்டும்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதமடைந்த நிலையில் இருப்பதாக வெளியாகும் செய்திகளும் வேதனையளிக்கின்றன. இந்தச் சூழலிலும், இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிடவும் புதிய புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதும், அதில் கல்விச் சமூகத்தின் கவனம் குவிவதும் தொடர்கின்றன. அடித்தளம் வலுவாக இருந்தால்தானே கட்டிடத்தை அழகுபடுத்தும் வேலைகள் எடுபடும்! திட்டங்களுக்குப் பின்னே ஓடிக்கொண்டிருந்தால் கட்டமைப்பு மேம்பாட்டில் எப்படி கவனம் திரும்பும்?

ஆசிரியர் பணியல்லாத பிற பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது இன்னொரு பெரும் பிரச்சினை. இதனால், கற்பித்தல் - கற்றலில் ஏற்படும் பின்னடைவு குறித்து ஆசிரியர் சமூகம் அவ்வப்போது அதிருப்தி தெரிவிக்கத்தான் செய்கிறது. ஆனால், பிற துறைப் பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஆசிரியர்கள் மீது திணிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அரசு அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. தனியார் பள்ளிகளுக்கு இருக்கும் சுய அதிகாரம்கூட அரசுப் பள்ளிகளுக்கு இருப்பதில்லை. பாடக் கல்வியைத் தாண்டி மாணவர்களின் தனித்திறனை வளர்த்தெடுப்பதற்கான கட்டமைப்புகள் கரைந்துவிட்டன. விளையாட்டு, ஓவியப் பயிற்சி ஆசிரியர்களே நியமிக்கப்படுவதில்லை என்பதே இந்த அவலத்தின் பின்னணியைப் பதிவுசெய்யப் போதுமானது!

எனவே, அடிப்படையாக இருக்கும் பிரச்சினைகளைக் களைய அரசு நடவடிக்கை எடுத்தாலே, பாதி சிக்கல்களைத் தீர்த்துவிடலாம். அரசுப் பள்ளிகளில் பயின்று வாழ்க்கையில் முன்னேறி அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களே அதிகம். எனவே, தங்களைப் போலவே இன்றைய தலைமுறை மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வியைப் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வெறுமனே பெருமிதம் பேசுவது பலனளிக்காது. துல்லியமான நடவடிக்கைகள் அவசியம்!

SCROLL FOR NEXT