தலையங்கம்

காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?

காமதேனு

தமிழகத்தில் ஒரே நாளில் 7 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்றது கடந்த வாரம் கவனம் ஈர்த்த செய்தி. இந்த நிதியாண்டில் மட்டும் 25 ஆயிரம் பேர் ஓய்வுபெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தியின் பின்னே, அரசின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகளும் ஒளிந்திருக்கின்றன.

அரசுத் துறையில் உள்ள 15 லட்சம் பணியிடங்களில் ஏறத்தாழ 7 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அரசு இயந்திரத்தின் அச்சாணியே அரசு ஊழியர்கள்தான் எனும் நிலையில், ஏறத்தாழ 50 சதவீதம் ஊழியர்கள் இல்லாமல் பல்வேறு பணிகள் முடங்கிக்கிடக்கும் என்பதை தனியே சொல்ல வேண்டியதில்லை.

காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்கள் கால வரையின்றி காத்திருக்க நேர்கிறது. மறுபுறம், போதிய ஊழியர்கள் இல்லாததால் ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்ள நேர்கிறது. அரசு அலுவலகங்களிலேயே பல பணிகளுக்குத் தனியார் நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்ஸிங் மூலம் ஊழியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்படுவது இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. இதன் காரணமாக, இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதும் தடைபடுகிறது.

இதோ, ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் நிலையில், கற்பித்தல் - கற்றல் பாதிக்கப்படப்போவது நிச்சயம். ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான பிரச்சினைகள் இன்று வரை தொடர்கின்றன. எத்தனையோ பேர் போட்டித் தேர்வு எழுதி பணிவாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம், போதுமான ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் கல்வித் தரத்தை உயர்த்தலாம். அரசு உருவாக்கும் திட்டங்களுக்கு ஏற்ப புதிய பணியிடங்களையும் உருவாக்குவது அவசியம்.

எனவே, காலிப் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை எந்தக் காரணம் கொண்டும் அரசு தள்ளிப்போடக் கூடாது. அரசு இயந்திரம் சிறப்பாகச் செயல்பட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் அரசு!

SCROLL FOR NEXT